2026 நவராத்திரி கவிதைகள் -5

வண்ணக் கலையரசி வாழ்வுதரும் பேரரசி
எண்ணங்கள் ஆளும் எழிலரசி- பெண்ணரசி
வாணி திருவருளை வாரித் தரும்போது
காணாத மேன்மையுண்டோ காண்.

பண்தருவாள் ஆடப் பதம்தருவாள் பாப்புனைய
எண்ணங்கள் எல்லாம் இனிதருள்வாள் -கண்தருவாள்
ஆய கலைகள் அனைத்துமே தானாவாள்
நேயக் கலைமகளை நாடு

அரும்பும் மழலை அரிச்சுவடி சொல்லக்
கரும்புமொழி கேட்டுக் களிப்பாள்_துரும்பையும்
தூணாக்க வல்ல தேவி கலைவாணி
காணத்தான் இந்தக் கவி.

பொன்னில் நனைத்த பதமலரை பாரதி
என் சிரசில் வைக்கும்நாள் எந்நாளோ-மின்னிடும்
கற்பனைகள் அன்னைக்குக் கால் சதங்கை ஆக்கியே
விற்பனனாய் ஆக விழைவு

நீந்துகிற அன்னத்தில் நங்கை அவள் ஏறி
மாந்த வருவாள் மணிக்கவிதை -சாந்தமாய்
ஞானம் மலர்வித்து நாளும் அருள் செய்வாள்
தேனில் குழைத்த தமிழ்..

-மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *