2026 நவராத்திரி கவிதைகள் 4
எண் வகைத் தோற்றம் ஏற்றிடும் உன்னால்
எத்தனை மாற்றங்கள்
மண்ணும் செழித்திட மழையும் பொழிந்திட
மிகப் பல ஏற்றங்கள்
கண்ணில் நிறைந்திடும் காருண்ய திருமகள்
கண்கொண்டு பார்க்கட்டுமே
எண்ணிய யாவையும் இனிதே நிகழ்வுற
இன்னருள் சேர்க்கட்டுமே

மாதவன் மார்பினை மஞ்சம் என்றாக்கிய
மாதே மகாலஷ்மி
தீதுகள் நீங்கிடத் துணை வரும் தாயே
தயாபரி கஜலக்ஷ்மி
ஏதுமில்லாதவர் எல்லாம் அடைந்திட
இனிதருள் தனலக்ஷ்மி
வேதனைப் போக்கி வெற்றிகள் கண்டிட
வரம் தரும் வரலக்ஷ்மி

பொங்கு கடலலை தன்னில் எழுந்திடும்
பொன்மகள் வந்திடுக
மங்கல நன்மைகள் எங்கும் நிறைந்திட
மலர் மகள் அருள் தருக
தங்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்து
தரிசனம் தந்திடுக
கங்கு கரையின்றி செல்வம் பெருகிட
கரிசனம் கொண்டிடுக

-மரபின் மைந்தன் முத்தையா

Comments

  1. தெய்வீக நறுமணம் வீசும் தென்றலாய் வந்தது இந்த கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *