2026 நவராத்திரி கவிதைகள் -3
கள்ளப் புலன்களையே – ஒரு கட்டில் அடக்கிடவே
உள்ளே இறங்கிடுவாள்-அந்த
உமையாள் ஆண்டிடுவாள்
வெள்ளக் கருணையிலே – ஒரு வீரத் தமிழ்க்கவிஞன்
உள்ளம் பறிகொடுத்தான்- அவன்
உன்மத்தமாகி நின்றான்;
நம்மைக் கருவி என்றே -அந்த
நாயகி தேர்ந்தெடுத்தால்
இம்மை வினை முடியும்-தினம்
இன்ப நலன் நிறையும்!
செம்மை வானத்திலே-அவள்
செஞ்சுடராய் எழுவாள்;
அம்மை நள்ளிரவில் – இருள்
ஆகவும் வடிவெடுப்பாள்:
கோள்களும் நடனமிடும்-எங்கள் காளியின் கண் அசைவில்
நாள்கள் என் செய்யுமோ-அருணை
நாதரும் கேட்டது தான்!
வாள்முனை கூர்மையிலே -வரும்
வினைகளை வீழ்த்திடுவாள்
தாள்மலர் அபயம் என்றால்-அந்த
தயா பரி காத்திடுவாள்
வாலை அவள் நினைத்தால்- இருள்
வானத்தில் நிலவு வரும்;
காலத்தில் அருள் புரி புரிந்தாள்- கடவூரில் கவிதை வரும்;
ஞாலத்தை அவள் படைத்தாள்- தரும் ஞானத்தில் தேவாரம்;
மூலத்தின் மூலம் அவள்- தரும்
மந்திரம் ஓங்காரம்





சக்தி இருந்தால் செய் இல்லையெனில் சிவனே என்று இரு….யாதுமாகி நின்றால் அவள்…. உங்கள் கவிதை சக்தியின் நிதர்சனம்…
கடவூர் அம்மனே கதி