வேலவன் வெண்பா

13
முந்தும் கனவில் முருகன் முகந்தெரியும்
வந்த சுவடிருக்கும் வாசலில்_ செந்தமிழ்ச் சந்தமவன் பாத சலங்கை ஒலியாகும்
செந்திலோன் மேல்பாடல் செய்.

14
கையில் கிளியாகி கந்தன் உரைத்தமொழி
மெய்யாய் விரித்துரைத்த மேன்மையர்- ஐயன்
அருணகிரி கண்ட
அனுபூதி காண
தருணமும் வந்திடுமோ தான்.

15
சொல்லறியாப் பிள்ளைசிறு நாவில் சடாக்ஷரம்
வல்லோன் எழுதினான் வேலாலே -எல்லையிலா
ஞானக் குருபரனும் நாதத் தமிழெடுத்து
வானம் அளந்த வகை


16
பாம்பன் சுவாமிஎனும்
பக்திப் பெரும்பிழம்பு
ஓம்என்று பாடி உயிர் செழித்தார் -ஆமையா
காலில் முறிவுவர கட்டிய கட்டினை
வேல்தாங்கி நின்ற விதம்


17
வண்ணச்சரபமாய் வாழ்ந்திருந்த ஞானியாம்
தண்டபாணி சாமி, தயாபரனை _எண்ணியே
ஏடடைய பாடல்கள்
எத்தனையோ யாத்தளித்து
வீடடைந்த மேன்மை விளம்பு


18
முருகா எனும் நாமம் மூச்சாகக் கொண்டே
உருகாத நெஞ்சும் உருகக் -கிருபையால்
ஆனந்த வாரியார்
ஆகாய மார்க்கமாய்
தானடைந்தார் வேலவன் தாள்.

_ மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *