19

வாணியின் கையாழும் வாசவன் வாசிக்கும்

வேணுவும் சேர்ந்தாலும் வெல்லுமோ- பேணும்

குழந்தை குகனும் குரலெடுத்து மெல்ல அழுங்குரலில் பொங்கும் அழகு

 

20

“சங்கரனுக் காபரணம் “சேய் என்பாள் “பைரவி”;

ஐங்கரனும் தம்பிக்”காம் போதி”ப்பான்-மங்கலமாய்

வள்ளிதெய் வானை விரும்புகிற “மோகனமாய்”

வள்ளலின் “தர்பார்” வரவு

(*சங்கராபரணம் பைரவி காம்போதி மோகனம் தர்பார் ஆகிய ராகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன)

 

21

பாலாபி ஷேகப் பிரியன் விரும்புகிற

ஆலா பனைவள்ளி ஆலோலம்- காலால்

வினைப்புனம் நீறாக்கும் வேலன் நடப்பான்

தினைப்புனம் தேடித் திரிந்து

 

22

பண்ணெடுக்கும் நேரமோ பாட்டின் பொருளாவான்

கண்ணெடுத்துப் பார்த்தால் கதிராவான் -வண்ணமயில்

ஆடும் அசைவெல்லாம்ஆளும் அறுமுகனைப்

பாடும் பணியே பணி.

 

23

கருவிகளும் சேர்ந்திசைக்கும்

கந்தன் கதையை;

அருவிவிழும் ஓசை அதற்கு-சுருதியாம்;

வானத்தின் மௌனம்

விளைந்து கருவாகும்

கானத்தை நெஞ்சேநீ கேள்;

 

24

கொட்டும் முழவோசை கோயில் மணியோசை

எட்டுத் திசையும் எதிரொலிக்கும் -திட்டமாய்

ஓங்கார ரூபம் உலகென்று காட்டவே

ரீங்காரம் செய்யும் ரசம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *