வேலவன் வெண்பா

7

நான்முகனை வெஞ்சிறையில் நீக்கப் பரமனுமே
தான்வந்து நின்ற தருணத்தில்-வான் வந்த
சீரார் உபதேசம் செய்தசிவ சண்முகனை
ஏரகத்தாய் என்றேநீ ஏற்று


8
ஓங்காரம் தானே ஒரு மயிலாய் ஆனதாம்
நீங்காமல் தாளிலே நின்றதாம்; -ஆங்கார
சூரன் மயிலாகி சேவடிகள் சேரும் முன்
வீரன் பறந்த விதம்.

9
காவி இடைக்கணிந்து கையிலே தண்டேந்தி
மேவினான் தென்பழனி மீதிலே-கூவி
“திருவாவி னன்குடியாய் தீரா” என் றேத்த
வருவானே வேலன் விரைந்து .

10
அமரருக் கெல்லாம் அபயம் தரவே
சமராடச் சென்றானே செந்தூர் -குமர வேல்
சீரலைவாய் கண்டாலே சென்மவினை தீருமே
யாரலைவார் பின்பிறவி ஏற்று

11

பூவினால் அர்ச்சித்துப் பால்பழங்கள் முன்வைத்து
நாவினால் ஆறெழுத்தை நாமோதி -சேவித்தால்
தேவானை நாதன் திருவடித் தாமரை
காவாதோ நெஞ்சே கனிந்து

12

பொங்கு சினம்தணிந்து பேரழகன் ஆவலாய்
மங்கையவள் வள்ளி மணங்கலந்து -தங்கும்
மலைகண்ட யாரும் மிகுமேன்மை செல்வம்
நிலை கண்டு வாழ்வார் நிறைந்து.

_ மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *