சைவ சித்தாந்தத்திலும் திருமுறைகளிலும் மட்டுமின்றி சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை ஆழங்கால் பட்ட அருளியல் அறிஞராக விளங்குபவர் ஸ்ரீமத் சாந்தி குமார சுவாமிகள்.
ஷீரடி பாபா நல்லருள் பெற்ற இந்த அருளாளர் தினகரன் ஆன்மீக இதழில் சாயி தத்துவம் என்கிற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளது.
தத்துவ பின்புலம் இலக்கிய ஆழம் ஆகியவற்றுடன் ஆன்மீக அனுபவமும் சித்திக்கும் போது எத்தகைய அற்புதம் நிகழும் என்பதற்கான எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம்.
முதல் கட்டுரையே சாயி என்கிற திருநாமத்தின் தாத்பரியத்தை விளக்குகிறது
கண்டோபா கோயிலில் முதல்முறையாக அந்த அந்தத் திருநாமம் எப்படி உருவானது என்பது தொடங்கி சாயி என்கிற சொல்லுக்கு “உள்ளதன்நுணுக்கம்” என்ற பொருள் உண்டு என்று விளக்கி சீவக சிந்தாமணி திருவாசகம் ஆகிய நூல்களின் மேற்கோள்கள் தந்து அதிலிருந்து அடுத்த படிக்கு செல்கிறார் சுவாமிகள்.
சாயி என்கிற சொல்லாடல் ஸ்ரீ சங்கரரின் ஸ்லோகத்தில் இடம் பற்றுள்ளது என்றும்
நுணுக்கம் என்ற பொருளில் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சாய் என்ற சொல்லை கையாளும் இடங்களும் மிகப் பொருத்தமாக இங்கே சுட்டபபடுகின்றன.
அத்துடன் ஆதிசேடன் அது நாகமணியின் ஒளி சாய் ஒலி என்று சொல்லப்படுவதையும் சாயாவனம் என்ற திருத்தலத்தின் பெயர் பொருத்தத்தையும் அடுக்கிக் கொண்டே செல்கிறார்.
எகிப்திய நாட்டில் சாய் என்ற சொல் பயன்படுத்தப்படும் விதம் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.
அடுத்தடுத்து வரும் அத்தியாயங்கள் அறிய தகவல்களின் களஞ்சியங்களாய் திகழ்கின்றன.
குருஸ்தான் என்ற இடத்தின் சூட்சும மகிமையை சொல்லி உபநிடதங்களின் ஆழமான அம்சங்கள் அடிப்படையில் பாபாவின் பெருமைகள் விரித்துரைக்கப்படுகின்றன.
சேரமான் பெருமாள் நாயனார் இஸ்ரேல் மன்னன் சாலமன் ஆகியோரிடம் இருந்த ஒற்றுமைகளும் போகிற போக்கில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றன.
அபிராமி பட்டர் அம்பிகையை பாடும்போது ” குறித்தேன் மனதில் நின் கோலமெல்லாம்” என்கிறார்.
அம்பிகை அப்படி மனதில் நிறுத்தி தன்னந்தனி இருந்தால் அதுவே தவம் என்றும் சொல்கிறார். ஷீரடி பாபாவின் திருக்கோலத்தை வெறுமனே தரிசிக்காமல் அதனை எப்படி மனதில் நிறுத்தி வழிபட வேண்டும் என்கிற நுட்பத்தை நான்காம் அத்தியாயத்தில் விவரிக்கிறார்.
நீண்ட காலமாக சாய் வழிபாட்டில் இருக்கும் பலருக்கும் கூட இந்த நுட்பம் தெரிந்திருக்காது.
இடது காலை நிலத்தில் ஒன்றி வலது காலை மடித்து அமர்ந்திருக்கும் பாபாவின் தோற்றம் பற்றிய விரிவான வர்ணனை அந்த திருக் கோலத்தில் எது தரிசனப் புள்ளி என்பதை அழகாக சொல்கிறது..
இன்று நுட்பத்தை விளக்க திருவாசகம் ஜெர்மானிய தத்துவ ஞானம் உட்பட எத்தனையோ அம்சங்கள் அணிவகுக்கின்றன.
என்னுடைய குருநாதர் சத்குரு அவர்களுடைய முந்தைய பிறவிகளில் ஒன்றில் அவருடைய சங்கல்பத்தை மதித்து அவருடைய குருநாதர் சிவ சொரூபத்தில் காட்சியளித்தார்.
அதேபோல பாபாவும் சிவனாகவே காட்சி தந்த சம்பவம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பாவா மேல் பற்று கொண்ட சீடராக இருந்த போதும் கூட அவருக்கு வடமொழி பற்றியோ பகவத்கீதை பற்றியோ தெரியாது என ஒரு தொண்டர் நினைத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த சுலோகத்திற்கு அவரும் அறியாத ஆழமான பொருளை பாபா விரித்துரைத்ததாகவும் இந்த நூலில் அருமையான ஒரு சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது.
மதுரை புலவர் நல்ல சிவம் பிள்ளை என்பவரால் பாடப்பட்ட ஸ்ரீ சாய் பாபா புராணம் பற்றிய அருமையான தகவல் இந்த நூலில் உண்டு
சாயி பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புத லீலைகளை விளக்குவதோடு அதன் பின்புறிந்திருக்கும் சூட்சுமமான அம்சங்களையும் விரித்துரைப்பது இந்த நூலின் தனித்தன்மை.
.
600 ஆண்டுகளுக்கு முன்னரே சாய்நாதன் அவதார ரகசியம் சிதம்பரத்தில் வெளிப்பட்ட விதம் பற்றியும் ஐந்தாவது அத்தியாயம் தெரிவிக்கிறது.
பற்பல அருளாளர்களின் புராணங்களும்
தமிழ் இலக்கியத்தின் அருமையான மேற்கோள்களும் ஒன்று கூடி சிந்தனைக்கும் விருந்து படைத்து ஆன்மீகத் தெளிவையும் தரக்கூடிய அற்புதப் படைப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
அறிவுச் செல்வம் வாய்க்கப் பெற்ற பலர் அருட் செல்வத்திற்கு ஆளானது இல்லை. அப்படி சிலர் இருந்தாலும் அவர்களுக்கு ஆன்மீக அனுபவங்கள் தனிப்பட்ட முறையில் நேர்ந்தது மிகக் குறைவு.
ஆனால் நுட்பமான அறிவு செல்வம் நிறைவான அருட்செல்வம் ஆன்மீகத்தில் நேரடியான அனுபவச் செல்வம் ஆகிய மூன்றும் வாய்க்கப் பெற்ற அருளாளர் சாந்தி குமாரசுவாமிகள்.
சாய்பாபா வழிபாடு பற்றி நாத்திகர்கள் குறை சொல்வதை காட்டிலும் சில ஆன்மீக அன்பர்களுக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்பது நடைமுறை உண்மை.
மற்றவர்களால் மேம்போக்கான வழிபாடு என கருதப்படும் எதுவும் அதன் அளவில் ஆழமான ஆன்மீக வித்தில் இருந்து விளைந்தவை என்பது நான் பல இடங்களில் பார்த்து உணர்ந்தது .
சமய மரபில் மிக ஆழமான அறிதலும் புரிதலும் மிக்க சாந்திக்குமார
சுவாமிகள் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தும் வித்தகம் பெற்றவர். ஆன்மீக தத்துவ துறையிலும் ஆழங்கால் பட்டவர்.
அவர் சீரடி சாயிநாதரை தன் குருவாக கொண்டதோடு அந்த தத்துவத்தில் இருக்கக்கூடிய ஆழமான ஆன்மீக உண்மைகளை இந்த நூலில் விரித்துரைப்பதால் அனைவரும் இதனை படித்து சில உண்மைகளை விளங்கிக் கொண்டால் நல்லது
இந்த நூலின் பெருமைகளை விரித்தால் பெருகும். வாங்கிப் படிப்பவர்களின் உள்ளம் உருகும். உயிர் உருகும். உண்மைகளை உணர்ந்திட வாய்க்கும்.
சுவாமிகளிடம் இந்தத் தொடரை முயன்று பெற்று அதனை நூலாகவும் வெளியிட துணை புரிந்திருக்கும் தினகரன் ஆன்மீக இதழ் ஆசிரியர் திரு கிருஷ்ணா நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.
வெளியீடு: சூரியன் பதிப்பகம்
விலை ரூபாய் 250/




