2026 நவராத்திரி கவிதைகள் -1
வானப் பரப்பின்மிசை-
மெல்ல
வளரும் பிறை சிலிர்க்க
தேனின் தாரை போல்-
எங்கள்
தேவியின் சலங்கை ஒலி ;
மோனக் கிறுக்கருக்கோ-
அவள்
மூச்சொலி கேட்டிடுமாம்
ஆனந்த லகரியிலே-
அவர்
அருமறை தோன்றிடுமாம்
கூந்தல் வனத்திடையே- ஒரு
கோடி விண்மீன்கள்
சாந்தச் சுடர் ஒளிர -அவள்
சங்கதி பேசிடுமாம்
“மாந்தர் படும் கவலை- அவை
மாயையின் விளையாட்டு
ஏந்தி நலந் தருவாள் எங்கள்
ஏந்திழை” என்றிடுமாம்
சங்கரி வரும் தருணம் -மனச்
சங்கடம் விலகுதென்றே
சங்கொலி எழுந்திடுமாம்- அந்த சமுத்திரம் ஆம் எனுமாம்
பொங்கிடும் இருள் நடுவே -அந்தப்
பூரணி புன்னகையே
எங்கெங்கும் மின்னல் என்றே- ஓடி
இடி மழை தந்திடுமாம்
கும்பிடும் கரங்களிலே- அவள்
குளிர் விழி பதிந்ததுமே
செம்பொன் செல்வம் எல்லாம்- கூடி சேர்ந்திசை பாடிடுமாம்
அம்பிகை திருவடியே- நம்
அடைக்கலம் என்றுணர்ந்தால்
உம்பரும் தொழுதேத்தும்- நல்ல
உயர்நிலை வாய்த்திடுமாம்
மரபின் மைந்தன் முத்தையா





