வேலவன் வெண்பா
(காப்பு )
தம்பிக்கை நீட்டும்முன் தாய்தந்தை யைச் சுற்றி
தும்பிக்கை நீட்டிய தன்மையனை –
நம்பிக்கை
கூப்பும் அடியாரைக் காக்கும் கணபதியைக்
காப்பென்று கொள்ளல் கடன்.
1
ஆறு தலைக்கணிந்த
ஐயன் நுதல்விழியில்
ஆறு தலையோ டவதரித்தான்-ஆறுதலை
என்றும் தருவான் எமையாள்வான் எப்போதும்;
குன்றம் உகந்த குகன்.
2
பொய்கை மலர்களிலே பூத்தான் கனலாக;
வையகம் காக்க வடிவெடுத்தான்- கைகளில்
கார்த்திகைப் பெண்கள் கனிந்தணைக்க நின்றவன்
கீர்த்திதனை சொல்லும் கவி.
3
மின்னல் சிரிப்பாம்:
மழையே கருணையாம்
கன்னல் மொழியாகும் கந்தனுக்கே-இன்னல்
எதையும் கடியும்
இருபதங்கள் காவல்;
விதியின் பிடியே விலகு.
4
வடிவங்கள் ஆறாய் விளையாடி நின்றான்;
பிடித்தணைத்தாள் சக்தி பரிவாய்- நொடிப்பொழுதில்
தேகம்ஒன் றாகி திருமுகங்கள் ஆறாகி
யோகவடி வானான் இவன்.
5
நாதப் ரணவத்தின் ஞானப் பொருள் கேட்டு
வேதனை இட்டானே வெஞ்சிறையில்- வேதனை
எல்லாம் தணிக்கின்ற
எம்மான் பெரும்புகழை
சொல்லாத சொல்லுண்டோ சொல்.
6
பால்வாங்கி உண்ணும் பருவத்தில் வீரமாய்
வேல்வாங்கி நின்றானே வித்தகன்-சேல்வாங்கும்
கண்ணாள் உமையாளின் கண்ணான கந்தனை
எண்ணாத நாளும் எதற்கு?
(தொடர்வான் )
– மரபின் மைந்தன் முத்தையா




