தமிழ் இலக்கிய உலகில் பழமைக்கும் புதுமைக்கும் தங்கப்பாலமாய் திகழ்பவர் கவிஞர் சிற்பி அவர்கள்.


தேர்ந்த கவிஞராகவும் சிறந்த அறிஞராகவும் புகழ்வாய்ந்த கல்வியாளராகவும் விளங்கும் இவர்
90 வயதை தொட்ட நிலையிலும் படைப்பிலும் பதிப்பிலும் இடையறாமல் ஈடுபட்டு வருபவர்.

இவர் 2026 அக்டோபர் மாதம் வெளியிட்டிருக்கும் நூல் “புதுக்கவிதை வேரும் விழுதும்” என்பதாகும்.

தமிழில் புதுக்கவிதை தோன்றிய காலம் தொட்டு இன்றைய நாள் வரை அந்த இலக்கிய வகைமை கண்டு இருக்கும் பரிமாணங்கள் பற்றிய சமநிலையான பதிவு இந்த நூல்.

புதுக்கவிதை இயக்கம் தோன்றிய பின் அதில் எத்தனையோ தரப்புகள் உருவாகிவிட்டன.
அந்தத் தரப்புகள் அனைத்திலும் பொருட்படுத்தத் தக்க கவிஞர்களை மிகச் சரியாக இந்த நூலில் கவிஞர் சிற்பி அடையாளம் காட்டுகிறார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான மகாகவி பாரதியின் பங்களிப்பில் இந்த நூலைத் தொடங்கினாலும் அதற்கு முன்னர் சங்க கால இலக்கியம் தொட்டு ஏற்பட்டு வரும் விதவிதமான மாற்றங்களை பட்டியலிடுகிறார்.

எதுகையும் மோனையும் இல்லாத
கவிதை குறுந்தொகையிலேயே உண்டு என்பதை சுட்டும் இடம் ஆழ்ந்து சிந்திக்க தக்கது.

1897 ஆம் ஆண்டில் பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் புதுக்கவிதை எழுதினார் என்கிற குறிப்பை உவமைக் கவிஞர் சுரதாவின் எண்சீர் விருத்தம் ஒன்றில் இருந்து மேற்கோள் காட்டி
அந்தப் புதுக்கவிதை நமக்கு கிடைக்கவில்லை என்பதையும் கவிஞர் சிற்பி குறிப்பிடுகிறார்.


அதேபோல 1898 ஆம் ஆண்டு தமிழ் கவிதையின் தேக்கத்திற்கு எட்டு காரணங்களை எடுத்து வைத்து மிகக் கூர்மையான உரை நிகழ்த்திய
க நா சிவராஜ பிள்ளை முன்வைத்த விமர்சனங்கள் இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருப்பதை இந்த நூல் நமக்கு காட்டுகிறது.
இந்தப் பின்புலத்தில் தான் பாரதியின் வருகை எத்தகையது என்பதை சிற்பி விவரிக்கிறார்.

ஆங்கில இலக்கியங்களில் பாரதிக்கு இருந்த ஈடுபாடு, சுவிட்சர்லாந்து நார்வே போன்ற நாட்டு எழுத்தாளர்கள் பற்றி எல்லாம் பாரதிக்கு இருந்த பார்வை ஆகியவை புதுக்கவிதைகளை பாரதி எழுத காரணமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்.

பிச்சமூர்த்தி கு ப ராஜகோபாலன் போன்றோரின் பங்களிப்பை குறிப்பிட்டு க நா சுப்பிரமணியம் எழுதிய உயில் கவிதையை சுட்டி கந்தசாமி கவிராயர் என்ற புனைப்பெயரில் புதுமைப்பித்தன் எழுதிய கவிதைகளில் இருக்கும் நயத்தையும் விவரிக்கிறார்.

அங்கு தொடங்கி எழுத்து இயக்கம் வழியே பங்களிப்பை தந்த கவிஞர்கள் தி.சோ வேணுகோபாலன் எஸ் வைத்தீஸ்வரன் ஆகியோரையும் அடையாளம் காட்டுகிறார்.

நகுலன் கவிதைகள் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. நகுலன் புதுக்கவிதைக்கு சாகா வரம் தந்தவர் என்று பாராட்டுகிறார்.

தவிக்கும் காமம் செதுக்கிய கவிஞன் என்கிற தலைப்பில் சி மணியின் பங்களிப்பு சிலாகிக்கப்படுகிறது.

பசுவையா என்கிற பெயரில் கவிதைகளில் எழுதிய சுந்தர ராமசாமியின் பங்களிப்பு விரிவாக பேசப்படுகிறது.
ஒரு பிரளயத்தின் தரிசனம் என்கிற தலைப்பில் பிரமீள் பங்களிப்பும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

புதுக்கவிதையின் மூன்றாம் அலை என்கிற தலைப்பில் மரபின் செழுமையோடு புத்தம்புதிய உள்ளடக்கத்தில் நவீன கவிஞராக வெளிப்பட்ட ஞானக்கூத்தனின் பங்களிப்பு எடை போடப்படுகிறது.

கவிஞர் சிற்பி முக்கிய அங்கம் வகித்த வானம்பாடி இயக்கம் உருவான விதம் அதற்கு வெவ்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் போன்றவை பற்றி மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

விதவிதமான விமர்சனங்களுக்கு நடுவே விளைந்த கனல் கவிஞராக நா.காமராசன் உயிர்ப்பு மிக்க கட்டுரை ஒன்றில் காட்டப்படுகிறார்

தொடர்ந்து வரும் கட்டுரைகளில் தமிழ் கவிதையின் மிக முக்கியமான நவீன ஆளுமைகள் அத்தனை பேரும் பேசப்படுகிறார்கள். கல்யாண்ஜி கலாப்ரியா தேவதேவன் சுகுமாரன் தமிழன்பன் மீரா வைரமுத்து பாலா பழமலை யுவன் சந்திரசேகர் அபி அறிவுமதி பழனி பாரதி என்று மிக நீண்ட பட்டியல். வெறும் பட்டியலாக இல்லாமல் அவர்கள் பங்களிப்பின் இடம் என்ன என்பதை இந்த நூலின் பக்கங்கள் விவரிக்கின்றன

தற்போதைய பெண் கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனித்தனியே கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன
அவ்வையின் பேத்திகள் என்று அவர்களை கொண்டாடுகிறார் கவிஞர் இளம்பிறை கவிதைகள் பற்றி முழு நிலவான இளம்பிறை என்று ஒரு தனி கட்டுரையை வடித்து பாராட்டி இருக்கிறார்.

புதுக்கவிதை இயக்கம் பற்றிய ஒரு முழுமையான புரிதலுக்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

அனைத்து தரப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் தந்து எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் புதுக்கவிதை பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு வசதியாக வாய்த்திருக்கும் ஒரு வரைபடம்.

தன்னுடைய நூலகத்தில் புதுக்கவிதை நூல்கள் மட்டும் 500 வது இருக்கும் என்று கவிஞர் சிற்பி குறிப்பிடுகிறார்.

மிகுந்த சிரத்தையுடன் அவற்றை வாசித்து வகைப்படுத்தி பகுத்தும் தொகுத்தும் சொல்லியிருக்கும் பாங்கு கவிஞர் சிற்பி அவர்களின் பெருந்தன்மை மிக்க பங்களிப்பு எனலாம்.

வெளியீடு அருட்செல்வர் நா மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் பொள்ளாச்சி விலை ரூபாய் 200

Comments

  1. பல தகவல்களை அள்ளித் தரும் அருமையான கட்டுரை

    சிற்பியின் நூலை வாசிக்கத் தூண்டும் வசீகரம் எழுத்தில் மின்னுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *