நவராத்திரி கவிதைகள் 2026 -:2


வினைகளின் பெருங்காட்டில்- ஊன்றி விளையும் உயிர் விதைகள்;
தனியாய் விசாரித்தால்- அவை
தொடரும் தொடர்கதைகள்;
இனியும் முளைப்பதில்லை- என
ஏங்கி அழுது என்றால்
கனிகிற பார்வையிலே- அந்தக்
காடுகள் தீப்பிடிக்கும்


முக்கண்ணி பார்வையிலே- அவை
முளையா தழிந்து விடும்
இக்கணம் அவள் நினைத்தால்- நம் ஏக்கங்கள் தீர்ந்துவிடும்
வக்கணையாய் சிரிப்பாள்-நம்
வலிகள் பறந்து விடும்
சிக்கெனப் பதம் பிடித்தால் -அந்த சிவபுரம் திறந்து விடும்


ஒன்பான் இரவுகளில்- அவள்
ஓம் என குரல் கொடுப்பாள்
அன்பாய் தொழுது நின்றால்-அவள்
ஆயிரம் நலம் கொடுப்பாள்
துன்பச்சுமைகள் எல்லாம்-சிறு
துகள் என்று துடைத்திடுவாள்
அன்னை பராசக்தி-எங்கள்
அம்பிகை அடிபணிவோம்

அந்தியின் இளநிறத்தாள் -அவள்
ஆயிரம் மதிமுகத்தாள்
விந்தைகள் பல படைத்தாள்-அந்த
வித்தகி நமை வளர்த்தாள்
சந்ததம் நிழல் கொடுத்தாள்-அவள்
சாத்திரத் தழல் வளர்த்தாள்
சுந்தரி தளிர் மலர்த் தாள் – இணை
சரண் என்று கைதொழுவோம்

– மரபின் மைந்தன் முத்தையா

Comments

  1. அருமை, எல்லாம் அந்த அபிராமி தாயின் கருனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *